நீலகிரியில் 88.82 சதவீதம் பேர் தேர்ச்சி
நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 88.82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 88.82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 3,502 மாணவர்கள், 3,588 மாணவிகள் என மொத்தம் 7,090 பேர் எழுதினர்.
இந்தநிலையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் பாட வாரியாக எடுத்த மதிப்பெண் விவரம் மாணவர்கள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. மேலும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் மாணவர்கள் தேர்ச்சி விவரம் ஒட்டப்பட்டது.
88.82 சதவீதம் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவில் நீலகிரி மாவட்டத்தில் 2,961 மாணவர்கள், 3,336 மாணவிகள் என மொத்தம் 6,297 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.82 சதவீதம் ஆகும். இதில் 84.55 சதவீதம் மாணவர்களும், 92.98 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 89.5 ஆக இருந்த நிலையில், மாநிலத்தில் 19-வது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மாணவர்கள் தாங்கள் தேர்ச்சி பெற்ற விவரத்தை உறவினர்களிடம் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில், வருகிற 26-ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், சில பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை நடந்து வருவதால், மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் தாங்கள் எடுத்த மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.