எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு: மாவட்டத்தில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் கடலூர் மாவட்டத்தில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடலூர்,
பொதுத்தேர்வு முடிவு
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளி, நகராட்சி பள்ளிகள், சுயநிதிபள்ளிகள் என 445 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 834 மாணவர்களும், 16 ஆயிரத்து 557 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 391 மாணவர்கள் எழுதினார்கள். இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கும், பிளஸ்-2 மாணவர்களுக்கும் 20-ந் தேதி (அதாவது நேற்று) ஒரே நாளில் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.
89.60 சதவீதம்
இதையடுத்து மாணவர்கள் தேர்வு எழுதும் போது அளித்திருந்த செல்போன் எண்களுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வந்தது. அதாவது காலை 10 மணிக்கு இணையதளத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் தங்களது மதிப்பெண்களை பார்த்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தியாக வந்தது. அதனை பார்த்து மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அறிந்து கொண்டனர். இதில் கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 34 ஆயிரத்து 391 மாணவர்களில் 15 ஆயிரத்து 274 மாணவர்களும், 15 ஆயிரத்து 542 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து 816 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 89.60 சதவீத தேர்ச்சி ஆகும்.
கடலூர், விருத்தாசலம்
கடலூர் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளி, நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 117 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 226 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 4 ஆயிரத்து 853 மாணவர்களும், 5 ஆயிரத்து 248 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 101 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 89.98 சதவீததேர்ச்சி ஆகும். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளி, நகராட்சி பள்ளிகள், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப்பள்ளிகள் என 128 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 983 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3 ஆயிரத்து 399 மாணவர்களும், 3 ஆயிரத்து 438 மாணவிகளும் என 6 ஆயிரத்து 837 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.64 சதவீத தேர்ச்சி ஆகும்.
சிதம்பரம், வடலூர்
சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் 94 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 119 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 3 ஆயிரத்து 233 மாணவர்களும், 3 ஆயிரத்து 264 மாணவிகளும் என 6 ஆயிரத்து 497 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91.26 சதவீதம் ஆகும். இதேபோல் வடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 106 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 63 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3 ஆயிரத்து 789 மாணவர்களும், 3 ஆயிரத்து 592 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 381 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.54 சதவீத தேர்ச்சியாகும்.