8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்
சாப்பாடு வாங்கி தருவதாகக்கூறி அழைத்துச் சென்று 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி:
வடலூர் அடுத்த கீழ்வடக்குத்து காலனியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 56). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர், வடலூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவி செய்து வந்தார். அதாவது, கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கிய அந்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இவரது பெட்டிக்கடையை தம்பியின் மகள் கவனித்து வருகிறார். பெற்றோரை இழந்த 14 வயதுடைய அந்த மாணவி தற்போது 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பாலியல் பலாத்காரம்
இந்த பெட்டிக்கடைக்கு செல்வராஜ், அடிக்கடி வந்து சென்றதால் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியை தனது காம பசிக்கு இரையாக்க துடித்தார். கடந்த 2-ந் தேதி மதியம் கடைக்கு வந்த செல்வராஜ், ஓட்டலில் சாப்பாடு வாங்கித்தருவதாக மாணவியிடம் கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய அந்த மாணவி, செல்வராஜுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வடலூர் ரெயில் ரோடு அருகே சென்றபோது செல்வராஜ் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அவர், அந்த மாணவியை அங்கு மரங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். உடனே அந்த மாணவி கூச்சலிட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், அந்த மாணவியின் கன்னத்தில் அறைந்து, கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
தொழிலாளி கைது
அதன்பிறகு வீட்டுக்கு வந்த அந்த மாணவி, அத்தையிடம் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கூறி கதறி அழுதார். இதுகுறித்து அந்த பெண், நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.
ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டிலும் இதே மாணவி, மளிகைக்கடை வியாபாரி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் தற்போது சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.
அது பற்றிய விவரம் வருமாறு:-
நெய்வேலி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 57). இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், வடலூரில் உள்ள மளிகைக்கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக செல்வார். அவ்வாறு சென்றபோது, வடலூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டில் ஆனந்தன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது ஒருநாள் ஆனந்தன், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை, கடலூர் போக்சோ கோர்ட்டில் முடிவுற்று கடந்த ஆண்டு ஆனந்தனுக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர், தற்போது கடலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.