பயணிகள் மூலம் வருவாய் ஈட்டியதில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு 8-வது இடம்
பயணிகள் மூலம் வருவாய் ஈட்டியதில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது.
தெற்கு ரெயில்வேக்குட்பட்ட கோட்டங்களில் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் பயணிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 ரெயில் நிலையங்கள் பட்டியலை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்தவகையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் ரூ.637.02 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.323.16 கோடி வருவாயுடன் 2-வது இடத்தையும், கோவை ரெயில் நிலையம் ரூ.159.57 கோடியுடன் 3-வது இடத்தையும், தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.114.கோடியுடன் 4-வது இடத்தையும், மதுரை ரெயில் நிலையம் ரூ.108 கோடியுடன் 5-வது இடத்தையும் பெற்றுள்ளன. திருச்சி ரெயில் நிலையம் ரூ.86.58 கோடி வருவாய் ஈட்டி தெற்கு ரெயில்வே அளவில் 8-வது இடத்தையும் தமிழக அளவில் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் கொரோனா பரவல் காரணமாக திருச்சி கோட்டம் வழியாக விரைவு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. பயணிகள் ரெயில்கள் இயக்க ஆரம்பித்தால் வரும் காலங்களில் பயணிகள் வருவாய் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.