குப்பைகளை சேகரிக்க 9 பேட்டரி வாகனங்கள்


குப்பைகளை சேகரிக்க 9 பேட்டரி வாகனங்கள்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பேரூராட்சியில் குப்பைகளை சேகரிக்க 9 பேட்டரி வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பேரூராட்சியில் குப்பைகளை சேகரிக்க 9 பேட்டரி வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறுகலான நடைபாதைகள்

கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு 35 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் குடியிருப்புகள், கடைகள், மார்க்கெட், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் இருந்து தினமும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். பின்னர் வளம் மீட்பு பூங்காவுக்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 100 பேர் குப்பைகளை அகற்றும் பணி, மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கோத்தகிரி பேரூராட்சியில் 21 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் 4 டன் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகிறது. இங்கு மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் குப்பைகள் சிறு துகள்களாக அரைக்கப்பட்டு சாலை போடுவதற்கு தாருடன் கலக்க அனுப்பப்படுகிறது. கோத்தகிரி பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளுக்கு செல்லும் நடைபாதைகள் குறுகலாக உள்ளன.

பேட்டரி வாகனங்கள்

இதனால் தூய்மை பணியாளர்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை, லாரிகளில் ஏற்றுவதற்காக நீண்ட தொலைவிற்கு சுமந்து செல்ல வேண்டி இருந்தது. இதை கருத்தில் கொண்டு சிறிய நடைபாதைகள், சாலைகளில் சென்று குப்பைகளை சேகரிப்பதற்காக, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் வாங்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு 9 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.

அந்த வாகனங்கள் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுகுறித்து செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கூறும்போது, புதிய வாகனங்கள் மூலம் குடியிருப்புகள், கடைகளில் இருந்து விரைவாக குப்பைகளை சேகரித்து, உடனுக்குடன் லாரிகளில் ஏற்றி வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் தூய்மை பணியாளர்களின் பணி எளிதாவதுடன், குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அகற்றப்படும். மேலும் உயரதிகாரிகள் நேரில் வந்து பேட்டரி வாகனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததுடன், விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.


Next Story