சிவசேனா பிரமுகர் வீட்டில் 9 விநாயகர் சிலைகள் பறிமுதல்
ஆற்றூர் அருகே அருகே நள்ளிரவில் சிவசேனா பிரமுகர் வீட்டில் இருந்த 9 விநாயகர் சிலைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவட்டார்:
ஆற்றூர் அருகே அருகே நள்ளிரவில் சிவசேனா பிரமுகர் வீட்டில் இருந்த 9 விநாயகர் சிலைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சதுர்த்தி கொண்டாட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் ெகாண்டாடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்திலும் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகாசபா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பொது இடங்கள் மற்றும் கோவில்களில் பூஜைக்கு வைக்கப்பட்டன. இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதற்கிடையே ஆற்றூர் அருகே தோட்டவாரம் பகுதியில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) மாவட்ட தலைவர் சுரேஷ் பிரகாஷ் என்பவர் வீட்டில் பொது இடங்களில் வைக்க விநாயகர் சிலைகள் வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
9 விநாயகர் சிலைகள் பறிமுதல்
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருவட்டார் தாசில்தார் முருகன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சுரேஷ் பிரகாஷின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் அங்கு வீட்டை சோதனையிட்ட போது 9 சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலைகளை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ' புதிதாக எந்த இடங்களிலும் சிலைகள் வைக்க அனுமதி இல்லை என்பதால் சுரேஷ் பிரகாஷ் தரப்பு சிவசேனா அணியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவருடைய வீட்டில் இருந்த விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயத்தில் மற்றொரு தரப்பு சிவசேனா அணியினருக்கு விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
பரபரப்பு
இதுதொடர்பாக திருவட்டார் தாசில்தார் முருகன் கூறுகையில், அனுமதியில்லாமல் விநாயகர் சிலைகள் வைத்திருந்ததால் அவற்றை பறிமுதல் செய்து வருவாய்த்துறை அலுவலகத்தில் வைத்துள்ளோம்' என்றார்.
பொது இடத்தில் வைக்க தயாராக இருந்த விநாயகர் சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.