மதுரையில் ரெயில் பெட்டியோடு எரிந்து 9 பேர் சாவு: பலியானவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர்கள் ஆறுதல்


ரெயில் பெட்டியோடு எரிந்து பலியான 9 பேரின் உறவினர்களை சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.

மதுரை


ரெயில் பெட்டியோடு எரிந்து பலியான 9 பேரின் உறவினர்களை சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.

9 பேர் பலி

மதுரை ெரயில் நிலையத்தில் நேற்று அதிகாலையில் நடந்த சம்பவத்தில் ரெயில் பெட்டியோடு எரிந்து 9 பயணிகள் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகையை அவர்களின் உறவினர்களிடம் வழங்கி உள்ளோம். இறந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது என்று கூறினார்.

மா.சுப்பிரமணியன்

சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டீன் டாக்டர் ரத்தினவேலுவிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்மிக சுற்றுலா வந்த பயணிகள் மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ராமேசுவரம் செல்ல இருந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை டீ போடுவதற்காக ரெயில் பெட்டிக்கு உள்ளேயே கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயம் அடைந்த நபர்களுக்கும் மருத்துவ உதவிகள் அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் உடல்கள் விரைவாக பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்படும். பரிசோதனை செய்ய 5 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

உத்தரபிரதேச மாநில அரசு மற்றும் அந்த மாநில அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்கள் கேட்டுக்கொண்ட அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். காயம் எதுவும் இல்லாத நபர்களுக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அந்த பயணிகளை பத்திரமாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பழனிவேல் தியாகராஜன்

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், மேயர் இந்திராணி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story