ரூ.9¼ லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூ மாலை வணிக வளாகம்
வேலூரில் ரூ.9¼ லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூ மாலை வணிக வளாகம் திறப்பு விழா நடந்தது.
தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாக கடைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அதையடுத்து ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட வேலூர் பூமாலை வணிக வளாக கடைகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் கடைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சாவிகள் வழங்கினார்.
இங்குள்ள கடைகளில் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் ஆயத்த ஆடைகள், மெத்தை, பாரம்பரிய அரிசி வகைகள், சத்துமாவு, காய்கறி, பழங்கள், பூக்கள், தோல் பைகள், சிறு தானியம், மஞ்சப்பை, அகர்பத்தி, சாம்பிராணி, ஸ்வீட் மற்றும் பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன், அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.