சாலைமறியலில் ஈடுபட்ட 4 ஊராட்சி தலைவர்கள் உள்பட 9 பேர் கைது


சாலைமறியலில் ஈடுபட்ட 4 ஊராட்சி தலைவர்கள் உள்பட 9 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2023 12:15 AM IST (Updated: 19 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 4 ஊராட்சி தலைவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 4 ஊராட்சி தலைவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊராட்சிகளுக்கு நேரில் வழங்காமல்..

கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இதில் 16 கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியினை ஊராட்சிகளுக்கு நேரில் வழங்காமல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாகவே டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி, அதனை உடனே நிறுத்த கோரி கடந்த 3-ந் தேதி, 6 ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதனை அடுத்து இரண்டு முறை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் நேற்று ஊராட்சி மன்ற தலைவர்கள் 4 பேர் தலைமையில் கொள்ளிடம் அருகே புத்தூரில் சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்து, சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்- இன்ஸ்பெக்டர் வீரமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் நேதாஜி(புளியந்துறை), கிள்ளி வளவன்(உமையாள்பதி), வடிவேல்(காட்டூர்), நெப்போலியன் (முதலைமேடு) உள்ளிட்ட 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 5 பேரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

ஊராட்சி தலைவர்கள் கைது

அப்போது பொதுமக்கள் அவர்களை கைது செய்ய விடாமல் சாலையில் அமர்ந்து வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் விரட்டினர்.

தொடர்ந்து 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கொள்ளிடம் கடைவீதியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் லெனின், உதயகுமார் மற்றும் விஜிதா டாலின் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 40 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் கொள்ளிடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story