கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் உடல் சிதறி பலியாகினர்.5 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்


கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் உடல் சிதறி பலியாகினர்.5 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் உடல் சிதறி பலியாகினர். இதில் 5 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.

நெஞ்சை உலுக்கும் இந்த பயங்கர வெடிவிபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பட்டாசு குடோன்

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இங்கு பழையபேட்டையை சேர்ந்த ரவி (வயது 46) என்பவர் பட்டாசு குடோன் வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தார்.

சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இங்கிருந்துதான் பட்டாசுகளை வியாபாரத்திற்கு அனுப்பி வந்தார்.

இந்த பட்டாசு குடோன் அருகில் ஒரு ஓட்டல், 2 மரக்கடைகள், ஒரு வெல்டிங் கடை மற்றும் ஷோபா தயாரிக்கும் கடைகள் இருந்தன. மேலும் பின்புறம் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் நிலையமும், குடியிருப்புகளும் உள்ளன. நேற்று காலை 9.45 மணி அளவில் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் பட்டாசு கடையில் இருந்தனர்.

வெடி விபத்து

அப்போது திடீரென்று பட்டாசு குடோனில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. அந்த நேரத்தில் குடோனில் இருந்த பட்டாசுகளும் வெடிக்க தொடங்கின. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், அருகில் இருந்த ஓட்டல், 2 மரக்கடைகள், வெல்டிங் கடை, ஷோபா கடை அனைத்தும் இடிந்து தரைமட்டமாகின.

மேலும் அந்த கடைகளில் இருந்தவர்களும், பட்டாசு குடோனில் இருந்தவர்களும் 'ஐயோ, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று கூக்குரலிட்டனர்.

அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீதும் பட்டாசுகள் வெடித்து விழுந்தன. அதேபோல மேற்கூரையும் பெயர்ந்து அவர்கள் மீது விழுந்தன.

உடல்கள் சிதறின

மேலும் சாலையில் இருந்து 200 அடி தூரத்தில் மனித உடல் பாகங்கள் சிதறிய நிலையில் விழுந்தன. நொடி பொழுதில் நடந்த இந்த பயங்கர வெடிவிபத்தை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அவர்கள் விபத்து குறித்து உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இதையடுத்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது. 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றும் பணி தொடங்கியது.

9 பேர் பலி

இந்த கோர விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மகன் ரித்திஷ் (21), மகள் ரித்திகா (19), பழையபேட்டையை சேர்ந்த வெல்டிங் கடை ஊழியர் இப்ராகிம் (21), இம்ரான் (18), ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி (55), கிருஷ்ணகிரி பில்லனகுப்பம் சிவா என்கிற சிவராஜ் (25), கிருஷ்ணகிரியை சேர்ந்த சரசு(35), திருப்பத்தூரை சேர்ந்த ஜேம்ஸ்(22) என மொத்தம் 9 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

மேலும் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவியின் மனைவி ஜெயஸ்ரீ (40), கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ஜாபர் (37), சபியான் (11), பெரிய மட்டாரப்பள்ளி திருப்பதி (65), இர்பான் (20), முனிரத்தினம் (33), சங்கரி (39), இம்ரான்கான் (20), தமிழ்செல்வன் (26), ஜெகதீசன் (48), பார்த்தசாரதி (22), மாதேஷ் (42), ஜெயேந்திரன் (23) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை கவனித்தனர்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டாசு குடோனில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்தில் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது ஓட்டலில் இருந்த சிலிண்டர் வெடித்து பட்டாசுகள் மீது பட்டதில் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story