அடகு கடைக்காரரிடம் 9 பவுன் நகை பறிப்பு


அடகு கடைக்காரரிடம் 9 பவுன் நகை பறிப்பு
x

ஆற்காட்டில் அடகு கடைக்காரரிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு ஜீவானந்தம் சாலை பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 48). இவர் வேலூர் மாவட்டம் வள்ளிமலையை அடுத்த பொன்னை பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு ராணிப்பேட்டையில் உள்ள இவரது தம்பியிடம் உதிரி நகைகளான ஞானக்குழாய், குண்டு உள்ளிட்ட 9 பவுன் நகைகளை வாங்கி ஒரு பேக்கில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆற்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்னால் மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு நகை வைத்திருந்த பேக்கை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நரேஷ்குமார் கையில் வைத்திருந்த பேக்கை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் 'ஹெல்மெட்' அணிந்து இருந்ததாகவும் பின்னால் அமர்ந்து வந்த நபர் தொப்பி போட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story