நீலகிரி மாவட்டத்தில் வானவில் மன்றம் மூலம் 9 ஆயிரம் மாணவர்கள் பயன்


நீலகிரி மாவட்டத்தில் வானவில் மன்றம் மூலம் 9 ஆயிரம் மாணவர்கள் பயன்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் வானவில் மன்றம் மூலம் 9 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி



நீலகிரி மாவட்டத்தில் வானவில் மன்றம் மூலம் 9 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.

வானவில் மன்றம்

பள்ளிக் கல்வித் துறையின் 2022-23-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி கடந்த ஆண்டு இறுதியில் வானவில் மன்றத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் மூலம் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர்.

இதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசுப் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கருத்தாளர் ராணி சோதனைகளை செய்து காண்பித்தார். அப்போது நெருப்பு எறிவதற்கு ஆக்சிஜன் தேவை என்பது குறித்து விளக்கினார். மாணவ- மாணவிகள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி பெற்றனர்.

இந்த திட்டம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி கூறியதாவது:-

கேள்வி கேட்கும் பண்பு

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வியினை ஊக்கப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் அறிவியல் மற்றும் கணிதம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு வானவில் மன்றத்தை தொடங்கி உள்ளது.

மாணவ, மாணவிகளிடையே உள்ள இயல்பான படைப்பாற்றல் ஆர்வத்தினை கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளை காணும் மனப்பாங்கினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டத்தின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 173 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 6-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை படிக்கும் 9 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன் அடைந்து வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறினார்.


Next Story