9 காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்


9 காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்
x

பேரணாம்பட்டு பகுதியில் 9 காட்டு யானைகள் மாந்தோப்பு மற்றும் வயல்களில் புகுந்து பயிர்களை சூறையாடின.

வேலூர்

யானைகள் அட்டகாசம்

பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் பத்தலபல்லி, சேராங்கல், எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா, பாஸ் மார்பெண்டா, ரங்கம்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் இந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், மா, வாழை தோப்புகளில் புகுந்து பயிர்களை சேதபர்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் சேராங்கல் கற்றாழை கொள்ளி வனப்பகுதியிலிருந்து 3 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பயங்கரமாக பிளிறியவாறு சேராங்கல் கிராமத்தில் உள்ள செந்தில் குமார் என்பவருடைய மாந்தோப்பில் புகுந்து அங்கிருந்த 14 கல்கம்பங்களை பிடுங்கி எறிந்ததுடன், 7 மாமரங்களை முறித்து சேதப்படுத்தி, மாங்காய்களை ருசித்து துவம்சம் செய்தது.

விரட்டியடிப்பு

நள்ளிரவு 2 மணி வரை அட்டகாசத்தில் ஈடுப்பட்டதால் விவசாயிகள் இரவு முழுவதும் விவசாய நிலங்களில் தீப்பந்தங்கள் கொளுத்தி, சுற்றுப்புற விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனவர் இளஞ்செழியன், வன காவலர்கள் சசிகுமார், அரவிந்தன் ஆகியோர் சென்று கிராம மக்கள், விவசாயிகள் ஆகியோருடன் இணைந்து பட்டாசு வெடித்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.

இதனைத் தொடர்ந்து சேராங்கல் -மோர்தானா வனப் பகுதிக்குள் சுற்றித் திரிந்து வரும் ஒற்றை யானை குண்டலப் பல்லி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மத்தேயு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிரை மிதித்து நாசம் செய்ததுடன், அங்கிருந்த 2 மாமரங்களை முறித்ததுடன், அருகிலுள்ள பிரேம் ராஜ் என்பவருடைய மாந்தோப்பில் புகுந்து அங்கிருந்த 9 மாமரங்களை முறித்து சேதப்படுத்தியது.

காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.


Next Story