வேலூர் மத்திய ஜெயில்களில் 90 போலீசார் அதிரடி சோதனை
வேலூர் மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயில்களில் ஒரே நேரத்தில் போலீசார், சிறைக்காவலர்கள் என்று 90 பேர் அடங்கிய குழுவினர் அதிரடியாக 2 மணி நேரம் சோதனை செய்தனர்.
வேலூர் மத்திய ஜெயில்கள்
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயில் உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகளாக 800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், கஞ்சா மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை தடுக்க ஜெயில் அதிகாரிகள், போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆனாலும் கைதிகள் ரகசியமாக தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 19-ந் தேதி ஆண்கள் ஜெயில் கழிப்பறையில் பதுக்கி வைத்திருந்த 10 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 கைதிகள் மீது பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
90 போலீசார்
இந்த நிலையில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 60 போலீசார் மற்றும் ஜெயிலர்கள் தலைமையில் 30 ஜெயில் காவலர்கள் என்று மொத்தம் 90 பேர் அடங்கிய குழுவினர் ஒரே நேரத்தில் மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயிலில் அதிரடியாக சோதனை செய்வதற்கு முடிவு செய்தனர்.
இதையொட்டி அவர்கள் நேற்று காலை 6 மணியளவில் ஜெயில் வளாகத்தில் அணிவகுத்து நின்றனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் ஜெயிலர்கள் கைதிகள் அறைகளில் சோதனை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர்.
2 மணி நேரம் சோதனை
அதைத்தொடர்ந்து அவர்கள் பல்வேறு குழுக்களாக ஆண்கள், பெண்கள் ஜெயில்களில் உள்ள கைதிகளின் அறைகளுக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். முதற்கட்டமாக கைதிகளை சோதனை செய்து அவர்களை வெளியே அனுப்பி பின்னர் அறைகளில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் ஜெயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக போலீசார் கண்காணிப்பு கோபுரங்களின் அடிப்பகுதி, கழிப்பறை, குளியறையில் சோதனை செய்யப்பட்டது.
ஆண்கள், பெண்கள் ஜெயில்களில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனையால் ஜெயில் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.