குமரி மாவட்டத்தில் தொடர் மழை: நிரம்பும் தருவாயில் 900 குளங்கள்
குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நிரம்பும் தருவாயில் 900 குளங்கள் உள்ளன. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,036 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நிரம்பும் தருவாயில் 900 குளங்கள் உள்ளன. அணைகளில் இருந்து வினாடிக்கு 1,036 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் மழை
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கைப் பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை இல்லாதநிலையிலும் நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை மழை விட்டு, விட்டு பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
உபரிநீர் திறப்பு
பேச்சிப்பாறை அணை- 3.4, பெருஞ்சாணி அணை- 8.2, சிற்றார்-1 அணை- 2, சிற்றார்-2 அணை-4.2, மாம்பழத்துறையாறு அணை- 20, முக்கடல் அணை- 26.2, பூதப்பாண்டி- 20.2, களியல்- 31, கன்னிமார்- 6.8, கொட்டாரம்- 2.8, குழித்துறை- 22.4, மயிலாடி- 5.2, நாகர்கோவில்- 31.4, சுருளக்கோடு- 8.6, தக்கலை- 6.3, ஆரல்வாய்மொழி- 10, அடையாமடை- 33, குருந்தங்கோடு- 9.8, முள்ளங்கினாவிளை- 6.8, ஆனைக்கிடங்கு- 19 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
இந்த மழையின் காரணமாக ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. குளங்களுக்கும் தண்ணீர் வரத்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 477 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 536 கன அடி தண்ணீர் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 41.26 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 349 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.77 அடியாக உள்ளது.
சாலையில் பள்ளம்
சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 139 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 15.08 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 8 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9.9 கன அடி தண்ணீரும் வருகிறது. மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1 அணைகளில் இருந்து வினாடிக்கு 1036 கன அடி தண்ணீர் பாசன வாய்க்கால்கள் வழியாகவும், உபரிநீர் திறப்பு மதகுகள் வழியாகவும் வெளியேற்றப்படுகிறது.
இந்த மழையால் தோவாளை தாலுகா பகுதியில் ஒரு வீடு இடிந்து சேதம் அடைந்துள்ளது. நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியில் மழையின் காரணமாக அனந்தன் கால்வாய் கரை இடிந்து சேதம் அடைந்துள்ளது. வல்லன்குமாரன்விளையில் இருந்து தொல்லவிளை செல்லும் கால்வாய் கரையோரமாக அமைந்துள்ள சாலையில் திடீரென பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமச்சாலையான இந்த சாலையில் வாகனங்கள் சென்றுவர இயலாத வகையில் போக்குவரத்து தடைபட்டது. மேலும் இந்த பள்ளத்தால் யாருக்கும் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதி மக்கள் பள்ளம் விழுந்த பகுதியைச் சுற்றிலும் கம்புகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.
900 குளங்கள்
குமரி மாவட்டத்தில் மொத்தம் 2,040 குளங்கள் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும்தொடர் மழை மற்றும் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆகியவற்றால் 900 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இவற்றில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. மற்ற குளங்களும் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது.