மதுரையில் நீட் தேர்வை 9,139 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் -13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன


மதுரையில் நீட் தேர்வை 9,139 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் -13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
x

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் மதுரை மண்டலத்தில் 9,139 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை


எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் மதுரை மண்டலத்தில் 9,139 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இதற்காக 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. 720 மதிப்பெண் கொண்ட நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடக்கிறது. இதற்காக தேர்வு மையத்துக்கு மாணவ, மாணவிகள் மதியம் 1.30 மணிக்குள் சென்று விட வேண்டும். மாணவர்கள் அரைக்கை சட்டை, சாதாரண பேண்ட், பொட்டு வைக்க கூடாது, தோடு அணிய கூடாது.

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வண்டியின் சாவியை உள்ளே கொண்டு செல்ல கூடாது. பைகளை உள்ளே கொண்டு செல்ல கூடாது என்பது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருள்கள் தேர்வு நடத்துபவர்களால் வழங்கப்படும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் கொண்டு செல்ல வேண்டும். இதனால், தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுடன் துணைக்கு ஒருவர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, நீட் நுழைவுத்தேர்வு தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது போன்ற கட்டுப்பாடுகள் பெற்றோர்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதற்கிடையே, மதுரையில் நீட் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து நீட் தேர்வுக்கான தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளர் ஹம்சபிரியா கூறியதாவது:-

9,139 மாணவர்கள்

மதுரை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 9,139 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு கண்காணிப்பாளர் தலைமையில் தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மையத்துக்கு ஒதுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 24 அறைகள் முதல் 44 அறைகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன. சி.இ.ஓ.ஏ., ஓம் சாதனா, யாதவா ஆண்கள் கல்லூரி, கேந்திரிய வித்யாலயா-2, யாதவா பெண்கள் கல்லூரி, சி.இ.ஓ.ஏ. உயர்நிலைப்பள்ளி, அத்யபனா பள்ளி, விரகனூர் வேலம்மாள், நாய்ஸ் மெட்ரிகுலேசன், எஸ்.இ.வி. மெட்ரிகுலேசன், கேம்.எம்.ஆர். இன்டர்நேசனல் மற்றும் மகாத்மா மாண்டிசோரி பள்ளி ஆகிய இடங்களிலும், தேனி முத்துத்தேவன் பட்டி வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அனுமதியாக தேர்வு அறைக்குள் குடிதண்ணீர், பிஸ்கெட் கொண்டு செல்லவும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிற மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முகமையின் விதிமுறை பின்பற்றப்படும்.


Next Story