பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை 9,152 மாணவ-மாணவிகள் எழுதவுள்ளனர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 46 மையங்களில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை 9,152 மாணவ-மாணவிகள் எழுதவுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 எனப்படும் 12-ம் வகுப்புக்கு இன்றும் (திங்கட்கிழமை), பிளஸ்-1 எனப்படும் 11-ம் வகுப்புக்கு நாளையும் (செவ்வாய்க்கிழமை), எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதியும் அரசு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. அரியலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கவுள்ள பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை 90 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 9,152 மாணவ-மாணவிகள் 44 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர். இன்று பிளஸ்-2 வகுப்புக்கு தமிழ் தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. முதல் 10 நிமிடம் வினா தாள் வாசிப்பதற்கு கொடுக்கப்படுகிறது. இதே போல் நாளை தொடங்கவுள்ள பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வை 90 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 8,370 மாணவ-மாணவிகள் 44 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர்.
ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கவுள்ள 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 10,085 பேர் மொத்தம் 58 மையங்களில் எழுதவுள்ளனர். மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய போலீசார் பாதுகாப்பு வசதிகள் என அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.