திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.77 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.77 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.77 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடந்தது. அதேபோல் பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தொடங்கி கடந்த மாதம் 5-ந்தேதி வரை நடந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆவலில் மாணவ-மாணவிகள் காத்திருந்தனர்.
இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று ஒரே நாளில் வெளியானது. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியானது. தேர்ச்சி விவரத்தை மாணவ-மாணவிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. அத்துடன் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் மாணவ-மாணவிகள் பலர் தங்களது செல்போன்களில் இணையதளத்தை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பார்த்தனர். அதேபோல் பள்ளிகளுக்கு சென்று தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் தெரிந்துகொண்டனர். மேலும் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவு விவரங்கள் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது.
91.77 சதவீதம் தேர்ச்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பொறுத்தவரை 354 பள்ளிகளில் 11 ஆயிரத்து 997 மாணவர்கள், 12 ஆயிரத்து 289 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 286 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 680 மாணவர்கள், 11 ஆயிரத்து 607 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 287 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91.77 சதவீத தேர்ச்சி விகிதம் ஆகும். அதேநேரம் 1,317 மாணவர்கள், 682 மாணவிகள் என மொத்தம் 1,999 பேர் தேர்வில் தோல்வியடைந்தனர்.
திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளி மாணவி பவித்ரா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 495 மதிப்பெண்கள் எடுத்தார். பாடவாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள், தமிழ்-98, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99. இதுகுறித்து பவித்ரா கூறுகையில், சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க வேண்டும் என்பதே இலக்கு என்றார்.