தாம்பரத்தில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் 92 பவுன் நகை கொள்ளை


தாம்பரத்தில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் 92 பவுன் நகை கொள்ளை
x

சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் 92 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் இரும்புலியூர் பெரியார் நகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவர், வருமான வரி செலுத்துதல் தொடர்பான ஆலோசனை வழங்கும் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் உள்ளார்.

கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்கியபோது அதில் பங்கேற்க ஜெயசீலன் கன்னியாகுமரி சென்றிருந்தார். இதற்கிடையில் அவரது தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் கன்னியாகுமரியில் இருந்து நேரடியாக சிவகங்கை சென்றுவிட்டார். தாம்பரத்தில் இருந்த அவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு சிவகங்கை சென்றுவிட்டனர்.

92 பவுன் நகை கொள்ளை

நேற்று முன்தினம் இரவு ெஜயசீலன் தனது குடும்பத்தினருடன் மீண்டும் தாம்பரத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை திறந்து அதில் வைத்து இருந்த 92 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. ஜெயசீலன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோ அருகிலேயே அதன் சாவி இருந்ததால் பீரோவை உடைக்காமல் சாவி மூலம் திறந்து நகையை அள்ளிச்சென்று உள்ளனர்.

பொதுமக்கள் அச்சம்

இது தொடர்பாக தாம்பரம் போலீசில் ஜெயசீலன் புகார் செய்தார். அதன்பேரில் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்களும், சம்பவ இடத்தில் கொள்ளையர்களின் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுபற்றி தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள 4 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டுபோனது. தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story