திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 93.27 சதவீதம் பேர் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 93.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் 23-வது இடத்தில் இருந்து 14-வது இடத்திற்கு முன்னேறியது.
93.27 சதவீதம் தேர்ச்சி
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 114 அரசுப் பள்ளிகள், 30 நிதியுதவி பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் 75 என மொத்தம் 219 பள்ளிகளை சேர்ந்த 7,887 மாணவர்களும், 7,864 மாணவிகளும் என மொத்தம் 15,751 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதியிருந்தனர்.
இதில் மாணவர்களில் 7,087 பேரும், மாணவிகளில் 7,604 பேரும் என மொத்தம் 14,691 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் மாணவர்கள் 89.86 சதவீதம்பேரும், மாணவிகள் 96.69 சதவீதம்பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 93.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
14-வது இடம்
இது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3.97 சதவீதம் அதிக மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் மாநில அளவில் 23-வது இடத்தில் இருந்து 14-வது இடத்தை பிடித்துள்ளது. அரசுப் பள்ளி அளவில் கடந்த ஆண்டு 14-வது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 11-வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.