வேலூர் மாவட்டத்தில் 94 ஏக்கர் பயிர்கள் நாசம்
வேலூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக 94 ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக 94 ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
72 மில்லி மீட்டர் மழைபதிவு
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான முதல் பலத்த மழை பெய்தது. புயல் கரையை கடந்த நேற்று முன்தினம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் மாலை வரை இடைவிடாது பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதன்பின்னர் நள்ளிரவு வரை சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்த மழையினால் பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.
மாண்டஸ் புயலினால் அடுக்கம்பாறை பகுதியில் கனமழையும், வேலூர் நகரம், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான முதல் பலத்த மழையும், பொன்னை பகுதியில் மிகவும் குறைவான மழையும் பெய்தது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மமி வரை பெய்த மழையில் அதிகபட்சமாக அடுக்கம்பாறையில் 72 மில்லி மீட்டர் மழை பதிவானது.
94 ஏக்கர் பயிர்கள் நாசம்
மாண்டஸ் புயலினால் பெய்த மழை மற்றும் காற்றினால் நேற்று முன்தினம் ஒரேநாளில் மாவட்டத்தில் 94 ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமானது. அதனால் 55 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வீடுகள் இடிந்தன. மாவட்டத்தில் உள்ள 26 நிவாரண முகாம்களில் ஒரு முகாம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் இதுவரை 66 விவசாயிகளுக்கு சொந்தமான 109 ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமாகி உள்ளது. 26 வீடுகள் பகுதியாகவும், 3 வீடுகள் முழுவதுமாகவும் இடிந்துள்ளது. உயிரிழப்பு எதுவும் இல்லை என்று வேளாண்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
காட்பாடி ரெயில் நிலையம்-43.5, மேல்ஆலத்தூர்-39.6, வேலூர் சர்க்கரை ஆலை (அம்முண்டி) -38.2, விரிஞ்சிபுரம்-37.8, வேலூர்-34.7, குடியாத்தம்-27.7, பேரணாம்பட்டு கமலாபுரம்-25.5, பொன்னை-2.2.