94 குழந்தைகளின் 19-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 19-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 19-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
தீவிபத்தில் 94 குழந்தைகள் சாவு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவே சோகத்தில் மூழ்கியது.
19-வது ஆண்டு நினைவு தினம்
இதையடுத்து ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 19-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அவரவர் வீடுகளில் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடை களையும் வைத்து படையலிட்டனர். பின்னர் தீ விபத்து நடந்த பள்ளி முன்பாக, 94 குழந்தைகளின் உருவபடங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனருக்கு மலர்களால் அலங்கரித்து பெற்றோர்கள், உறவினர்கள், காயமடைந்த மாணவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெற்றோர்களும், தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் சகோதர, சகோதரிகள் கதறி அழுதபடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க.-அ.தி.மு.க.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், செ.ராமலிங்கம் எம்.பி., சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ., துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டு குழந்தைகளின் பேனருக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினரும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.
ஊர்வலம்
அதன் பிறகு 94 குழந்தைகளின் பெற்றோர்களும் பழைய பாலக்கரையில் உள்ள இறந்த குழந்தைகளின் நினைவிடத்துக்கு சென்று மாலை அணிவித்தும், பூக்களைத் தூவியும் மவுன அஞ்சலி செலுத்தினர். தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவு தினத்தை முன்னிட்டு இளைஞர் அரண் என்ற அமைப்பின் சார்பில் நேற்று மாலை கும்பகோணம் பழைய பாலக்கரையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஊர்வலம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது.
மோட்ச தீபம் ஏற்றினர்
பின்னர் நேற்று மாலை காசிராமன் தெருவிலிருந்து பெற்றோர்கள் ஊர்வலமாக சென்று மகாமக குளத்தில் இறந்த குழந்தைகளின் நினைவாக மோட்ச தீபம் ஏற்றினர்.