தத்தனேரி மேம்பாலத்தில் இருந்து வைகை வடகரை சாலைக்கு செல்ல ரூ.95 கோடியில் இணைப்பு பாலம்
தத்தனேரி மேம்பாலத்தில் இருந்து வைகை வடகரை சாலைக்கு செல்ல ரூ.95 கோடியில் இணைப்பு பாலம்
தத்தனேரி மேம்பாலத்தில் இருந்து வைகை வடகரை சாலைக்கு செல்ல ரூ.95 கோடியில் இணைப்பு பாலம் கட்டப்படுகிறது. அதன் பணிகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார.்
இணைப்பு பாலம்
மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேசிய நெடுஞ்சாலை மூலம் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.350 கோடி செலவில் வைகை கரை சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை, திண்டுக்கல் பாலத்தில் இருந்து விரகனூர் ரிங்ரோடு வரை வைகை ஆற்றின் இருபுறமும் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் புட்டுத்தோப்பு, செல்லூர்-தத்தனேரி மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த சாலை பணி முடிவு பெறாமல் உள்ளது. இதனால் வைகை கரை சாலையை வாகனங்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
இந்த வைகை கரை சாலை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று கோ.தளபதி எம்.எல்.ஏ., நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று கொண்ட அவர், இந்த வைகை கரை சாலை முழுமை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார். அதன்பலனாக தற்போது செல்லூர்-தத்தனேரி பகுதியில் ரூ.95 கோடி செலவில் இணைப்பு பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதனைத்தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. இதனை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் கலெக்டர் அனிஷ் சேகர், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுரங்கபாதை
இந்த பாலம் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வைகை வடகரை சாலை, தற்போது தத்தனேரி மேம்பாலம் ஏறும் பகுதியில் நின்று போய் உள்ளது. ஒன்று வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி சென்று ஆரப்பாளையம் செல்வதற்கான இடதுபுற சாலையில் திரும்பி வலதுபுறம் வைகை வடகரையில் செல்ல வேண்டும். இல்லையென்றால், தத்தனேரி மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை வழியாக சென்று எல்.ஐ.சி அலுவலகம் அருகில் உள்ள சுரங்கபாதையில் நுழைய வேண்டும். பின்னர் தத்தனேரி மயானம் எதிர்புறம் உள்ள சாலையில் சென்று வைகை வடகரை சாலையை அடைய வேண்டும். இந்த பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே இந்த பகுதியில் இருபுறமும் வைகை சாலையை இணைக்க புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. அதாவது செல்லூர் பாலத்தில் ஏறும் வாகனங்கள், வைகை வடகரை சாலைக்கு செல்வதற்கு ஏதுவாக தத்தனேரி மேம்பாலத்தில் இருந்து இணைப்பு பாலம் கட்டப்படுகிறது. தற்போது தத்தனேரி மேம்பாலத்தில் ரெயில்வே கிராசிங்கை தாண்டி தான் இணைப்பு பாலம் பிரிக்கப்படுகிறது. எனவே இந்த பணிகள் விரைவாக முடிந்து விடும். அதே போல் புட்டுத்தோப்பு பகுதியில் வைகை தென்கரை சாலையிலும் பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.