தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 95 செல்போன்கள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 95 செல்போன்கள் மீட்கப்பட்டது. அவற்றை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 95 செல்போன்களை போலீசார் மீட்டனர். அவற்றை உரிமையாளர்களிடம் நேற்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.
தனிப்படை
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து செல்போன்களை மீட்க அறிவுறுத்தினார்.
செல்போன்கள் மீட்பு
அதன்பேரில் சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து செல்போன்களை கண்டுபிடித்து வருகின்றனர். அதன்படி ஏற்கனவே மாவட்டத்தில் 680 செல்போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 95 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை ரூ.79 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 775 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன.
நேற்று மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி, மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கி பேசினார்.
ஏமாற வேண்டாம்
அப்போது, செல்போன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு செல்போனில் ஆன்லைன் வகுப்பு பயிலும் போது அவற்றை கட்டுப்பாடுடன் கையாள்வதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும், மேலும் குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனுக்கு போன் லாக் தேவையில்லை, குழந்தைகளுக்கு பெற்றோருக்கு தெரியாமல் ரகசியங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அது பெற்றோர்கள் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்போது தற்கொலை செய்வது வரை நிகழ்ந்து உள்ளது.
மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி.யை கேட்டால் கொடுக்க வேண்டாம். வங்கி ஒருபோதும் உங்கள் ஓ.டி.பியை கேட்காது.சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற குற்ற நிகழ்வுகளில் இருந்து தற்காத்து கொண்டு தங்கள் பணத்தை பாதுகாத்து, பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்.