சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 97 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது- ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய 2 பேரும் சிக்கினர்


சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 97 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது- ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய 2 பேரும் சிக்கினர்
x

சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 97 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய 2 பேரும் சிக்கினர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 97 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய 2 பேரும் சிக்கினர்.

தடைசெய்யப்பட்ட புகையிலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கொமாரபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா, பான்மசாலா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் வசித்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியை சேர்ந்த அபுபக்கர் (வயது 50) என்பவருடைய வீட்டை சோதனையிட்டார்கள். அப்போது வீட்டுக்குள் கஞ்சா, பான்மசாலா பொருட்கள் என 97 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் அபுபக்கரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அபுபக்கர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை சேர்ந்த ஷேக் அப்துல்லா (27), அம்மா பட்டினத்தை சேர்ந்த முகமது இட்ரோஸ் (27)ஆகியோர் வெளிமாவட்டங்களில் இருந்து ஸ்கூட்டரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபுபக்கர், ஷேக்அப்துல்லா, முகமது இட்ரோஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிைல பொருட்களையும், 2 ஸ்கூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் 2 பேர் கைது

இந்தநிலையில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திப்பு சுல்தான் ரோட்டில் இன்ஸ்பெக்டர் முருகேசன் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஸ்கூட்டரில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். போலீசார் நிற்பதை பார்த்ததும் அவர்கள் திரும்பி செல்ல முயன்றனர். உடனே உஷாரான போலீசார் இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் ஸ்கூட்டரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சத்தி வடக்குப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ் (27), பிரிட்டோ காலனி சேர்ந்த புவனேஸ்வரன் (39) ஆகியோர் என்பதும் இருவரும் ஸ்கூட்டரில் கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சாவையும், அவர்கள் கஞ்சா விற்று வைத்திருந்த ரூ.1200-யும், ஸ்கூட்டர்களையும் பறிமுதல் பறிமுதல் செய்தனர்.


Next Story