புள்ளியியல் பணிக்கான சார்நிலை தேர்வை 983 பேர் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிக்கான தேர்வை 983 பேர் எழுதினார்கள். 1,026 பேர் பங்கேற்கவில்லை.
புள்ளியியல் சார்நிலை பணிக்கான தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் காலியாக உள்ள உதவி புள்ளியியல் ஆய்வாளர், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து சார்நிலை பணியில் கணக்கிடுபவர் உள்ளிட்ட 217 இடங்களுக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வுகளை எழுத 2,009 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, கோடையிடி குப்புசாமி மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொசப்பேட்டை ஈ.வெ.ரா. நாகம்மை அரசு பெண்கள் பள்ளி உள்பட 7 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நேற்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 2-ம் தாள் தேர்வு நடைபெற்றது.
983 பேர் தேர்வு எழுதினர்
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிக்கான முதல், 2-ம் தாள் தேர்வை 983 பேர் எழுதினார்கள். இது 49 சதவீதமாகும். 51 சதவீதம் பேர் அதாவது 1,026 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்வு மையம் மற்றும் தேர்வு அறைகளை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுஅறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர் என்று 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தேர்வு மையங்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.