தலைவாசல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1½ வயது ஆண் குழந்தை பலி
தலைவாசல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தலைவாசல்,
ஆண் குழந்தை
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் ஊராட்சி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். நெல் அறுவடை எந்திர டிரைவர். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு 1½ வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை இருந்தான்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் பிரியா சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். இதனிடையே வெளியே சென்று இருந்த ராஜேஷ்குமார், திரும்பி வந்து, மகனை தேடிப்பார்த்தார். அப்போது எங்கும் கிடைக்கவில்லை.
சாவு
தொடர்ந்து வீட்டின் அருகில் திறந்து இருந்த தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது அங்கே குழந்தை சாத்விக், தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தலைவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பினனர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை சாத்வித் பரிதாபமாக உயிரிழந்தான். குழந்தையின் உடலை பார்த்து தாய் பிரியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்கச்செய்தது.
விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சாத்விக், திறந்து கிடந்த தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.