பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலி


பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலி
x

கரூரில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை பலியானது.

கரூர்

1½ வயது குழந்தை

கரூர் திண்ணப்பாநகர் அருகே உள்ள திருப்பதி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஐ.டி.ஊழியர். இவரது மனைவி மோகனா. இந்த தம்பதிக்கு சாய் ஆதவ் (வயது 3), சாய் மிதுன் (1½) ஆகிய மகன்கள். இதில் சாய் ஆதவ் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வருகிறான்.

சாய் ஆதவ் தினமும் வீட்டின் வாசலில் இருந்து பள்ளிக்கு சொந்தமான வேனில் பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் அதேவேனில் வீட்டிற்கு வருவான். அதேபோல் நேற்று காலையும் சாய் ஆதவ் பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் மாலையில் பள்ளி வேனில் வந்து வீட்டின் வாசலில் இறங்கினான்.

அப்போது சரவணன் வீட்டின் கதவை திறந்து வெளியே சென்று சாய் ஆதவ்வை அழைத்து வருவதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்த இளையமகன் சாய் மிதுன் வெளியே ஓடிவந்து வேனின் முன்பு நின்று கொண்டிருந்தான். இதை கவனிக்காத சரவணன், தனது மூத்த மகன் சாய் ஆதவ்வை வேனில் இருந்து இறக்கி, வேனின் பின்புறமாக அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்துள்ளார்.

வேன் சக்கரத்தில் சிக்கி பலி

இதற்கிடையே சாய்மிதுன் வேன் முன்பு நிற்பதை கவனிக்காத வேன் டிரைவர் வேனை எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சக்கரம் சாய் மிதுன் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சாய் மிதுன் துடிதுடித்து பரிதாபமாக இறந்து விட்டான். இதைக்கண்ட பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாய்மிதுனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வேன் டிரைவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story