10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
ஊட்டியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி,
ஊட்டியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஜான் லெசி ரிச்சர்ட் (வயது 78). 10 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருகிறாள். அவள் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில் சிறுமி ஜான் லெசி ரிச்சர்ட் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்து உள்ளாள். அவரும் சிறுமியிடம் பழகி வந்தார்.
இதற்கிடையில் சமீபத்தில் சிறுமி ஜான் லெசி ரிச்சர்ட் வீட்டிற்கு பாத்திரம் கொடுக்க சென்றாள். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி நடந்தது குறித்து தனது பாட்டியிடம் கூறி அழுதுள்ளாள்.
போக்சோவில் கைது
இதுகுறித்து சிறுமியின் பாட்டி ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சிறுமி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். பின்னர் ஜான் லெசி ரிச்சர்டிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜான் லெசி ரிச்சர்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.