செல்போன் வாங்கி தராததால் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை மிரட்டல்


செல்போன் வாங்கி தராததால் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை மிரட்டல்
x

செல்போன் வாங்கி தராததால் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

10-ம் வகுப்பு மாணவர்

ஆவடி அடுத்த வீராபுரம், மோரை, நியூ காலனியை சேர்ந்தவர் சுமதி (வயது 35). இவருடைய கணவர் சுப்புராயல், 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சுமதி, ஆவடியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் தயாளன் (வயது 15). இவர் திருமுல்லைவாயல் எஸ்.எம். நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தயாளன் தனது தாயாரிடம் நீண்ட நாட்களாக செல்போன் வாங்கி தரும்படி கேட்டு அடம்பிடித்து வந்தார். அதற்கு சுமதி, "தற்போது 10-ம் வகுப்பு படிக்கிறாய். நன்றாக படி. பின்னர் செல்போன் வாங்கி தருகிறேன்" என்று கூறியதாக தெரிகிறது.

தற்கொலை மிரட்டல்

இதை ஏற்றுக்கொள்ளாத தயாளன், நேற்று மாலை 5 மணியளவில் திடீரென வீராபுரம் அருகே கிருஷ்ணா கால்வாய் ஓரம் சுமார் 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் சுமார் 50 அடி உயரத்தில் ஏறி நின்று செல்போன் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதை பார்த்த பொதுமக்கள், ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்குள் அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து விட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தாயார் மயங்கி விழுந்தார்

ஆனால் அதற்கு மறுத்த தயாளன் தொடர்ந்து, கோபுரத்தின் மேலேயே நின்று கொண்டிருந்தார். தயாளனின் தாயார் சுமதியும் தகவல் அறிந்து அங்கு வந்து மகனை கீழே இறங்கிவரும்படி கூறி கெஞ்சினார். சிறிது நேரத்தில் சுமதி மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சுமதியை ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அதற்குள் அப்பகுதியில் இருட்டி விட்டது. இதற்கிடையில் தாயார் மயக்கமடைந்ததை பார்த்த தயாளன், இரவு 7 மணியளவில் அவரே மனம் இறங்கி கீழே இறங்கி வந்தார். பின்னர் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் தயாளனுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story