15 ஆண்டுகள் பயன்படுத்திய வாக்குப்பதிவு எந்திரங்கள் கணக்கெடுப்பு
திண்டுக்கல் உள்பட மாநிலம் முழுவதும் 15 ஆண்டுகள் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் இணைத்து பயன்படுத்தப்படுகிறது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் மாவட்டந்தோறும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு, பழையதாகி போன மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதையொட்டி மாநிலம் வாரியாக 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
30 ஆயிரம் எந்திரங்கள்
இதில் தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 30 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டவை என்பது தெரியவந்தது. அவற்றில் தற்போது பயன்படுத்தும் நிலையில் இருக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், பழுதான எந்திரங்கள் என மாவட்ட வாரியாக கணக்கெடுத்து அனுப்பும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.