கல்லூரி பேராசிரியையிடம் 16½ பவுன் சங்கிலி பறிப்பு
மார்த்தாண்டத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கல்லூரி பேராசிரியையிடம் 16½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை,
மார்த்தாண்டத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கல்லூரி பேராசிரியையிடம் 16½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கல்லூரி பேராசிரியை
மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு காட்டுவிளையை சேர்ந்தவர் ஜெனிஸ். இவருடைய மனைவி மெர்லின் டயானா (வயது36). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். தற்போது ேகாைட விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8½ மணியளவில் மெர்லின் டயானா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்க மார்த்தாண்டத்துக்கு சென்றார். அங்கிருந்து பொருட்கள் வாங்கி விட்டு இரவு 9½ மணியளவில் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.
16½ பவுன் நகை பறிப்பு
அவர்கள் மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்பு வந்து கொண்டிருந்த போது பின்னால் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் கணவன்-மனைவியை நெருங்கி வந்ததும் பின்னால் இருந்த நபர் திடீரென பேராசிரியை மெர்லின் டயானாவின் கழுத்தில் கிடந்த 16½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து பேராசிரிைய 'திருடன்... திருடன்...' என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் அங்கு விரைந்து வர தொடங்கினர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் களியக்காவிளை நோக்கி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
போலீசில் புகார்
இதுகுறித்து மெர்லின் டயானா மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் இளவரசு விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மேலும் மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கல்லூரி பேராசிரியையிடம் 16½ பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.