கணவர் மீதான வெறுப்பில் கழுத்தை நெரித்து கொன்ற 17 வயது சிறுமி


கணவர் மீதான வெறுப்பில் கழுத்தை நெரித்து கொன்ற 17 வயது சிறுமி
x

நிலக்கோட்டையில் 4 மாத குழந்தை மர்மச்சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவர் மீதான வெறுப்பில் கழுத்தை நெரித்து, 17 வயது சிறுமி தனது குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

திண்டுக்கல்

4 மாத பெண் குழந்தை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 27 வயதான கட்டிட தொழிலாளி ஒருவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமி (தற்போது 17 வயது) ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுமிக்கு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

அப்போது தான், சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு சிறுமியும், கட்டிட தொழிலாளியும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்தநிலையில் சிறுமி மீண்டும் கர்ப்பம் ஆனார். அவருக்கு, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது.

நடத்தையில் சந்தேகம்

இதற்கிடையே சிறுமியின் நடத்தையில், கட்டிட தொழிலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு சிறுமி வந்து விட்டார். 2 குழந்தைகளும் கட்டிட தொழிலாளியுடன் இருந்தனர்.

இதற்கிடையே பிரிந்து சென்ற தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி, நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கட்டிட தொழிலாளி புகார் அளித்தார்.

அதன்பேரில் கடந்த 27-ந்தேதி இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கணவருடன் செல்ல விரும்பாத சிறுமி, தனது பெற்றோருடன் சென்று விட்டார். மேலும் 2 குழந்தைகளும் சிறுமியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

4 மாத குழந்தை மர்மச்சாவு

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில், 4 மாத குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக சிறுமி தெரிவித்தார். இது, கட்டிட தொழிலாளிக்கு சிறுமி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எனவே தனது குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக, கட்டிட தொழிலாளி நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கழுத்தை நெரித்து கொலை

இந்தநிலையில் 4 மாத குழந்தையின் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது குழந்தையின் இறப்பு குறித்து சிறுமியிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது கணவர் மீதான வெறுப்பில் 4 மாத குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சிறுமி ஒப்புக்கொண்டாள். இதனையடுத்து போலீசார் சிறுமியை கைது செய்தனர்.

பள்ளிப்பருவ காதல்

கைது செய்யப்பட்ட சிறுமி, கிராம நிர்வாக அலுவலர் கலா முன்னிலையில் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டில், நான் 9-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய கணவர், எனது ஊரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது, நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டோம். இந்த சந்திப்பு காதலாக மாறியது.

இதனை அறிந்த இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எங்களது காதல் தொடர்ந்தது. படிப்பை பாதியில் நிறுத்திய நான், பெற்றோர்கள் அனுமதி இன்றி கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டேன். அதன்பிறகு நான் கர்ப்பம் ஆனேன். எனக்கு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலில் பெண் குழந்தை பிறந்தது.

அப்போது எனக்கு 15 வயது. இதனால் எனது கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் கோர்ட்டில் சமரசம் பேசி அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் 2 குடும்பத்தினரின் உதவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனக்கு 2-வதாக குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

கணவர் மீது வெறுப்பு

இந்த சூழலில் என்னுடைய நடத்தையில், எனது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அவருடன் சேர்ந்து வாழ நான் விருப்பம் இல்லை.

எனவே குழந்தைகளை அவரிடம் விட்டு விட்டு என்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். இருப்பினும் அவர் போலீஸ் நிலையத்துக்கு சென்று குழந்தைகளை என்னிடம் ஒப்படைத்து விட்டார். எனக்கு என் கணவர் மீது தொடர்ந்து வெறுப்பு ஏற்பட்டது. அதேசமயம் குழந்தையும் நோய்வாய்ப்பட்டு இருந்தது. இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன்.

கடந்த 27-ந்தேதி அதிகாலை என்னுடைய பெற்றோர் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் என் குழந்தையை கழுத்தை நெரித்தேன். இதில் குழந்தை இறந்து போனது. பின்னர் நான் தூங்குவது போல் நடித்தேன்.

நாடகம் ஆடினேன்

எனது பெற்றோர் என்னை எழுப்பினர். அப்போது குழந்தை கை, கால் அசையாமல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தது போல் நடித்தேன். அவர்களும் என்னை நம்பி விட்டனர். உடனடியாக எனது கணவருக்கும், எங்கள் உறவினர்களுக்கும் குழந்தை இறந்து போன தகவலை தெரிவித்தார்கள்.

உடல் நலக்குறைவால் குழந்தை இறந்ததாக கூறி நாடகம் ஆடினேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு சிறுமி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறகு ஒடிந்த பறவையாய்...

அறியாத பருவத்தில், புரியாத காதலில் விழுந்து வாழ்க்கையை இழந்த சிறுமி தற்போது குழந்தையை கொன்று குற்றவாளி கூண்டுக்குள் சென்று விட்டாள். துள்ளித்திரியும் பள்ளிப்பருவத்தில் மலரும் காதலை, கிள்ளி எறிவது மாணவிகளுக்கு நல்லது என்பதற்கு இந்த சிறுமியே சிறந்த உதாரணம்.

கல்லூரியில் காலடி எடுத்து வைத்து சிறகடித்து பறக்க வேண்டிய இந்த சிறுமியின் வாழ்க்கை சீரழிந்து, சிறகு ஒடிந்த பறவையாய் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு காலம் தவறிய காதலே காரணம் என்பதே உண்மை. எனவே பள்ளி மாணவிகளிடம் காதல் வலை வீசும் காளையர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என்று போலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story