வடலூரில் பரபரப்பு2 மாத ஆண் குழந்தை ரூ.3½ லட்சத்துக்கு விற்பனைபெண் சித்த மருத்துவர் உள்பட 4 பேர் கைது


வடலூரில் பரபரப்பு2 மாத ஆண் குழந்தை ரூ.3½ லட்சத்துக்கு விற்பனைபெண் சித்த மருத்துவர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் 2 மாத ஆண் குழந்தையை ரூ.3½ லட்சத்துக்கு விற்பனை செய்த பெண் சித்த மருத்துவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்

வடலூர்,


இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் அருள்முருகன். இவரது மனைவி சுடர்விழி (வயது 37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருள்முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடர்விழி, புதுச்சத்திரம் அடுத்த பெத்தாங்குப்பத்தில் வசித்து வரும் தனது அக்காள் சுதாவின் கணவர் விஸ்வநாதனிடம், தன்னிடம் ஒரு ஆண் குழந்தை உள்ளதாகவும், அதற்கு பிறப்பு சான்றிதழ் வாங்கி தாருங்கள் என கேட்டுள்ளார்.

இதையடுத்து விஸ்வநாதன், அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்காக பல்வேறு வகையில் முயற்சி செய்தார். இருப்பினும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவரால் பிறப்பு சான்றிதழ் வாங்க முடியவில்லை. மேலும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் பிறரது குழந்தையை வைத்திருந்தால் போலீசில் சிக்கிக் கொள்வாய் என கூறியுள்ளனர்.

போலீசார் விசாரணை

இதனால் குழந்தையை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் கொடுத்து விடலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு விஸ்வநாதன், கடலூர் கலெக்டர் அலுவலகம் சென்று, அங்கிருந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம், தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை சேர்ப்பது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார், விஸ்வநாதனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வடலூரில் உள்ள சுடர்விழியிடம் குழந்தை இருப்பதாக தெரிவித்தார்.

ரூ.3½ லட்சத்துக்கு வாங்கிய பெண்

இதையடுத்து சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் சுடர்விழியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வடலூர் கோட்டக்கரை பகுதியில் வசித்து வரும் சித்த மருத்துவர் மெகருன்னிசா (67) என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி, பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் குழந்தையை ரூ.3½ லட்சத்துக்கு வாங்கியதும், அதற்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால் குழந்தையை வேறு யாரிடமும் விற்க முடியாது என்பதால், தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க முயன்ற போது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சித்த மருத்துவர் மெகருன்னிசாவிடம் விசாரணை நடத்தியதில், வடலூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த ஆனந்த் என்பவர், கீரப்பாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் குழந்தையை வாங்கி, அதனை மெகருன்னிசாவிடம் கொடுத்தது தெரியவந்தது. மேலும் அதற்கு கீரப்பாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த கஜேந்திரன் மனைவி ஷீலா (37), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்த செல்லக்குட்டி மகன் ஆனந்தன் (47) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடர்விழி, சித்த மருத்துவர் மெகருன்னிசா, ஷீலா, ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 மாத ஆண் குழந்தையை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே குழந்தையை விற்ற ஆனந்த் என்பவரை போலீசார் பிடித்து, குழந்தையின் பெற்றோர் யார்?, எதற்காக குழந்தையை விற்றனர்? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story