தனியார் நிறுவன ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
தனியார் நிறுவன ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 32). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று திண்டிவனம் செல்வதற்காக லாரியில் வந்த இவர், நள்ளிரவில் லாரியை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் பகுதியில் நிறுத்திவிட்டு லாரியின் கதவில் தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், திடீரென லாரியின் கதவை திறந்தனர். இதனால் மோகன்ராஜ் லாரியில் இருந்து கீழேவிழுந்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அவர் சத்தம் போடவே, அவர்கள் தப்பிச்சென்று விட்டனர். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மாயமாகி இருந்ததும், அந்த நபர்கள் அவரை தாக்கி சங்கிலியை பறித்துச்சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.