கட்டை பையில் ஆதரவற்ற நிலையில் கிடந்த பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை
கட்டை பையில் ஆதரவற்ற நிலையில் கிடந்த பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகில் உள்ள அத்தியந்தல் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் இன்று காலை ஆள் நடமாட்டம் இல்லாத போது குழந்தை ஒன்று அழுதது.
அப்போது அந்த வழியாக சென்ற அக்கம்பக்கத்தினர் குழந்தை அழும் குரல் கேட்டு கோவிலுக்குள் சென்று பார்த்தனர்.
அங்கு ஒரு கட்டை பையில் பிறந்து சுமார் 3 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில் கிடந்தது.
பின்னர் அந்த குழந்தையை அவர்கள் மீட்டனர். மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் அக்குழந்தை சேர்க்கப்பட்டு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.