பாம்பு கடித்து 3 மாத ஆண் குழந்தை சாவு
ஒடுகத்தூர் அருகே வீட்டில் தூங்கிய 3 மாத ஆண் குழந்தை பாம்பு கடித்து இறந்தது.
3 மாத ஆண் குழந்தை
ஒடுகத்தூரை அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 23). இவரது மனைவி செல்வி (21). தலை பிரசவத்திற்காக செல்வி ஒடுகத்தூர் அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்றார். அங்கு செல்விக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிரனீஷ் என பெயர் வைத்தனர். 3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு முழுவதும் குழந்தை அருகில் தூங்கிய தாய் செல்வி, விடிந்ததும் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார்.
குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தது. திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது.
பாம்பு கடித்து சாவு
இதனால் பதறிப்போன செல்வி சென்று பார்த்தபோது குழந்தையை நாகப்பாம்பு கடித்துவிட்டு படம் எடுத்தபடி நின்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை அவரது உறவினர்கள் மீட்டு, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.