மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் சங்கிலி பறிப்பு
ஆற்காட்டில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் சங்கிலி பறித்த நபர்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பாய் (வயது 65). கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக ஆற்காடு வரை நேற்று மதியம் பஸ்சில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெங்கடாபுரம் செல்வதற்காக ஆற்காடு பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் மூதாட்டி ராம் பாய்யிடம் ஒரு பேப்பரை கொடுத்து இதை சிறிது நேரம் வைத்திருங்கள் பின்னர் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த மூதாட்டி பேப்பரை வாங்கி வைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் மூதாட்டி சுயநினைவு இழந்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து சுய நினைவு வந்த மூதாட்டி கூச்சலிட்டு அழுதுள்ளார். இது குறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.