'ஹேர் கிளிப்பை' விழுங்கிய 3 வயது குழந்தை
திருவாரூர் அருகே 'ஹேர் கிளிப்பை' விழுங்கிய 3 வயது குழந்தையின் இரைப்பையில் இருந்த அதனை 10 நிமிடத்தில் டாக்டர்கள் அகற்றினர்.
3 வயது குழந்தை
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 3 வயதில் சஞ்சனா என்கிற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, தான் அணிந்து இருந்த ஹேர் கிளிப்பை விழுங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை வாந்தி எடுத்துள்ளது. அதனை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் உடனடியாக எக்ஸ்ரே எடுக்குமாறு கூறியுள்ளார்.
10 நிமிடத்தில் அகற்றிய டாக்டர்கள்
எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது குழந்தையின் இரைப்பையில் ஹேர் கிளிப் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர்கள் திருவாரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் குழந்தையை பரிசோதித்து விட்டு மயக்க மருந்து நிபுண டாக்டர் உதவியுடன் அறுவை சிகிச்சையின்றி என்டோஸ் கோபி மூலம் குழந்தையின் இரைப்பையில் சிக்கி இருந்த ஹேர் கிளிப்பை 10 நிமிடத்தில் அகற்றினர்.