மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4 வயது சிறுவன் சாவு
நெல்லையில் தந்தையுடன் சென்றபோது திடீர் ‘பிரேக்’ போட்டதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஷெரீப் (வயது 25), பிளம்பர். இவரது மகன் அப்துல் காதர் (4). நேற்று முன்தினம் மாலையில் ஷெரீப் மோட்டார் சைக்கிளில் தனது மகனை அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார். பின்னர் அவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.
ஆமீன்புரம் 6-வது தெருவில் வந்தபோது, முன்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் திடீரென அங்குள்ள சாலையை கடந்துள்ளார். இதனால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஷெரீப் தனது மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது, பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த சிறுவன் அப்துல் காதர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தான். இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இரவில் அப்துல் காதர் பரிதாபமாக உயிர் இழந்தான். இந்த விபத்து குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.