கொட்டாம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி சாவு -தாயாருக்கு தீவிர சிகிச்சை
கொட்டாம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவரை மீட்க முயன்ற தாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவரை மீட்க முயன்ற தாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிணற்றுக்குள் தவறி விழுந்தாள்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்துள்ள சின்ன கற்பூரம்பட்டியை சேர்ந்தவர் அழகேந்திரன் (வயது 39). விவசாயி. இவருடைய மனைவி வாசுகி. இவர்களுக்கு அபிக்சா, பிரதீபா என 2 பெண் குழந்தைகள் உள்ளன. அழகேந்திரன் பரமாண்டிதோப்பு கிராமத்தில் உள்ள தென்னை, மாமர தோப்பை குத்தகைக்கு எடுத்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மகள் பிரதீபா(4) தென்னந்தோப்பு பகுதியில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தாள்.
சாவு
சிறிது நேரத்தில் மகளை காணவில்லை என அவரது தாயார் வாசுகி தோட்டத்திற்குள் தேடி பார்த்தபோது பிரதீபா கிணற்றுக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் கிணற்றுக்குள் குதித்து அவரை வாசுகி மீட்டார். ஆனால் வாசுகியும், சிறுமி பிரதீபாவும் மயங்கிய நிலையில் இருந்தனர். இதையடுத்து 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி பிரதீபா பரிதாபமாக இறந்தார். வாசுகி மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.