இசை கச்சேரிகளில் தவில் அடித்து அசத்தும் 5 வயது சிறுவன்


இசை கச்சேரிகளில் தவில் அடித்து அசத்தும் 5 வயது சிறுவன்
x

இசை கச்சேரிகளில் தவில் அடித்து அசத்தும் 5 வயது சிறுவன்

நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் பகுதிகளில் நடைெபறும் இசை கச்சேரிகளில் 5 வயது சிறுவன் தவில் அடித்து அசத்தி வருகிறான். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதால் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

5 வயது சிறுவன்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு மடவிளாகத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது 5 வயது மகன் சாய் வெங்கடேஷ். இவன், கீழ்வேளூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு 2-ம் வகுப்புக்கு செல்ல உள்ளான்.

நாகை அருகே உள்ள கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் பாலசுந்தரம், நாதஸ்வர வித்வானாக பணிபுரிந்து வருகிறார். மேலும் சுப நிகழ்ச்சிகளுக்கும் நாதஸ்வரம் வாசித்து வருகிறார்.

தவில் அடித்து அசத்தல்

இசை கச்சேரிகளுக்கு பாலசுந்தரம் செல்லும்போது தன்னுடன் தனது மகனையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். சிறு வயதில் ஓடியாடி விளையாட வேண்டிய சிறுவனோ, தந்தை எப்போது நாதஸ்வரத்தை கையில் எடுப்பார். தானும், தந்தையுடன் செல்வோம் என்பதிலேயே கண்ணும், கருத்துமாக இருப்பான்.

கோவில்களிலும், இசை கச்சேரிகளிலும் தந்தை நாதஸ்வரம் வாசிப்பதையும், அங்கு தவில் அடிப்பதையும் சிறுவன், மிக நுணுக்கமாகவும், ஈடுபாட்டுடனும் கவனித்து வந்துள்ளான். தற்போது சிறுவன் சாய் வெங்கடேஷ், பெரியவர்கள் வாசிக்கும் நாதஸ்வர இசைக்கு ஏற்றார்போல் தவில் அடித்து அசத்தி வருகிறான்.

கடந்த மாதம் நாகை அருகே உள்ள கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் 10 நாட்கள் நடந்த பங்குனி உற்சவ விழாவில் தனது தந்தையுடன் சேர்ந்து தினமும் கோவிலுக்கு வந்து தவில் அடித்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்வேளூர் யாதவ நாராயணப்பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்திலும் சிறுவன் கலந்து கொண்டு தவில் அடித்து அசத்தினான்.

தாத்தா, பிரபல வித்வான்

சின்னஞ்சிறுவயதில் மிகபிரமாதமாக சிறுவன் தவில் வாசித்ததை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

சாய் வெங்கடேசின் தாத்தா கணேசன், கீழ்வேளூர் பகுதியில் பிரபலமான நாதஸ்வர வித்வான் ஆவார். இவர், தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாதஸ்வரம் வாசிக்க பயிற்சி

இதுகுறித்து நாதஸ்வர வித்வான் பாலசுந்தரம் கூறுகையில், எனது மகன் 3 வயது முதலே தவில் அடிப்பதில் ஆர்வம் கொண்டு உள்ளான். நான் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளில் மற்ற இசை கலைஞர்களுடன் தவில் அடித்து வருகிறான்.

மிகவும் ஆர்வத்துடன் தவில் அடித்து வருவதால் எங்களுக்கே மிக ஆச்சரியமாக உள்ளது. தற்போது நாதஸ்வரம் வாசிப்பதற்கு உரிய அடிப்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறான் என்றார்.

சமூக வலைதளங்களில் வைரலால் குவியும் பாராட்டுகள்

இசையின் மீது கொண்ட அதீத பற்று காரணமாக சிறுவன், ஆர்வத்துடன் தவில் அடித்து பலரையும் ரசிக்க வைத்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து சிறுவன் சாய் வெங்கடேசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Next Story