கூடலூர் அருகே 5 வயது ஆண் காட்டு யானை பலி


கூடலூர் அருகே 5 வயது ஆண் காட்டு யானை பலி
x

கூடலூர் அருகே 5 வயது ஆண் காட்டு யானை வழுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்


கூடலூர் அருகே 5 வயது ஆண் காட்டு யானை வழுக்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டு யானைகள் கூட்டம்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி எல்ல மலை ஆதிவாசி கிராமத்தை காட்டு யானைகள் கூட்டம் நேற்று முன்தினம் முற்றுகையிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பல நாட்களாக தொடர்ந்து பலத்த மழையும் பெய்து வருகிறது. இரவு முழுவதும் அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானைகள் தொடர்ந்து பிளிறியவாறு இருந்தது.

இதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் சத்தம் வந்த இடத்துக்கு சென்று ஆதிவாசி மக்கள் பார்த்தனர். அப்போது காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். மேலும் அதன் அருகே சில காட்டு யானைகள் சோகத்துடன் நின்றிருந்தது. இது குறித்து ஓவேலி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

ஆண் காட்டு யானை பலி

அப்போது சேற்றில் நடக்க முடியாமல் வழுக்கி கீழே விழுந்து காட்டு யானை பலியாகி இருக்கலாம் என சந்தேகித்தனர். தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் கொட்டும் மழையில் காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து யானையின் இறப்புக்கு வேறு காரணம் எதுவும் இருக்கலாம் என்ற கோணத்தில் முக்கிய உடற்பாகங்களை ஆய்வகத்துக்கு கொண்டு செல்வதற்காக சேகரித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

சுமார் 5 வயதான ஆண் காட்டு யானை கூட்டமாக சக யானைகளுடன் வந்துள்ளது. மேலும் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதேபோல் யானையின் வயிற்றுப் பகுதியில் காயங்களும் இருக்கிறது. இதனால் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அறிக்கை கிடைத்த பின்னரே முழு விவரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story