50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது


50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது
x

தஞ்சையில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது. 16 டன் எடை கொண்ட அந்த மரத்தை கிரேன் மூலம் 3 கி.மீ. தூரம் எடுத்து வந்து நட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது. 16 டன் எடை கொண்ட அந்த மரத்தை கிரேன் மூலம் 3 கி.மீ. தூரம் எடுத்து வந்து நட்டனர்.

சாலை விரிவாக்க பணி

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரங்களில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதில் பழமை வாய்ந்த மரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு அகற்றப்பட்ட ஒரு மரத்திற்கு பதிலாக புதிதாக 10 மரங்கள் நடப்பட்டு வருகின்றன.

அதே போல் தஞ்சை மணிமண்டபத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வல்லம் நம்பர் 1 சாலையில் 50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் இருந்தது. இந்த பகுதியிலும் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த மரத்தை அகற்றுவது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவுசெய்தனர்.

3 கி.மீ. தூரம் எடுத்துச்சென்றனர்

மேலும் பழமை வாய்ந்த இந்த மரத்தை வேரோடு பெயர்த்து எடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆலமரத்தின் கிளைகள் வெட்டிக்கழிக்கப்பட்டன. மேலும் மண்ணை தோண்டி மரத்தை வேராடு பிடுங்கினர். அதன்படி 7 மீட்டர் உயரமும், 16 டன் எடையும் உடைய இந்த மரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடப்பட்டது.

இந்த மரம் பிடுங்கிய இடத்தில் இருந்து புதிய கலெக்டர் அலுவலகம் 3 கி.மீ. தூரம் ஆகும். மேலும் இந்த மரத்தை ஒரு கிரேன் எந்திரம் மூலம் தூக்கிச்செல்ல முடியவில்லை. இதையடுத்து 2 கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மரத்தை சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 3 கி.மீ. தூரம் துக்கி சென்று நட்டனர்.

கலெக்டர் தண்ணீர் ஊற்றினார்

இந்த மரத்தைப் பார்வையிட்டு தண்ணீர் ஊற்றிய கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் கிராமங்களில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதே போல் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் 1 மரத்திற்கு பதிலாக 10 முதல் 20 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இந்த தஞ்சையில் பழமை வாய்ந்த ஆலமரத்தை அப்புறப்படுத்த மனமில்லாமல், நெடுஞ்சாலைத் துறையினர், கவின்மிகு தஞ்சை இயக்கத்தினர் இணைந்து பெயர்த்து எடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நட்டுள்ளனர். இதன் உயரம் 7 மீட்டர் என்பதால், 3 மீட்டர் அடி ஆழத்துக்கு குழி வெட்டப்பட்டு, நடப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல முயற்சி. இந்த மரம் நல்ல காற்றும், நிழலும் தரும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறைக் கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், உதவிக் கோட்டப் பொறியாளர் கீதா, உதவிப் பொறியாளர் மோகனா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கவின்மிகு தஞ்சை இயக்கத்தை சேர்ந்த முத்துக்குமார், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் திருமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story