அரசு பொது மருத்துவமனையில் 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு சாலை மறியல்


அரசு பொது மருத்துவமனையில் 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு  சாலை மறியல்
x

வந்தவாசி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 6 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. டாக்டர்கள் சரியான சிகிச்சை அளிக்காததே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 6 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. டாக்டர்கள் சரியான சிகிச்சை அளிக்காததே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிகிச்சைக்கு அனுமதி

வந்தவாசி கோட்டைக்குள தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம்மூசா. இவரது மனைவி ஜபீனா. இவர்களது 6 மாத ஆண் குழந்தை முகமதுரசூல் 3 நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமதுரசூலுக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தாய்ப்பால் கூட குழந்தை குடிக்காததால் டாக்டரிடமும் செவிலியரிடமும் ஜபீனா கேட்டுள்ளார். ஆனால் மெதுவாகத்தான் குணமாகும் என அலட்சியமாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை முகமதுரசூல் உயிரிழந்தான்.

டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிக்காததே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தில் அவர்கள் புகார் அளித்தனர். ஆனால் எந்த விசாரணையும் அது குறித்து மேற்கொள்ளப்படவில்லை.

மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த முகமதுரசூலின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தையின் உடலுடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் அவர்கள் குழந்தை உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் பாபுஜி, துணை இயக்குனர் டாக்டர் ஏழுமலை, ஆரணி துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் இப்ராஹிம்மூசா மற்றும் அவர்களது உறவினர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் அப்போது உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

விசாரணை

இதைத் தொடர்ந்து குழந்தை முகமதுரசூலின் உறவினர்கள், இரவுப் பணியிலிருந்த டாக்டர், செவிலியர் உள்ளிட்டோரிடம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் பாபுஜி விசாரணை மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில் ''குழந்தை முகமதுரசூலின் உயிரிழப்புக்கு டாக்டர், செவிலியர் ஆகியோரின் சேவை குறைபாடு காரணம் என விசாரணையில் தெரிய வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தோர் அதிக அளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு உயிர்காக்கும் மருந்துகள், நாய்க்கடி, பாம்புகடி மருந்துகள் தேவையான அளவில் இருப்பதில்லை என்ற புகார்கள் ஏற்கனவே இருந்து வருகின்றன. இதனால் தீவிர சிகிச்சை வேண்டுவோர் செங்கல்பட்டு, சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனை சரி செய்ய வேண்டும் என ஏற்கனவே கடந்த வாரம் 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் டாக்டர்கள், செவிலியர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவமும், பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த விஷயங்களில் மருத்துவமனை நிர்வாகம் தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.Next Story