நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்
குமரி கிழக்கு கடலோர பகுதிகளில் நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020 கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜுன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில் விசைப்படகுகள் கிழக்கு கடலோர பகுதியில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் குமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15-ந் தேதி (அதாவது நாளை) முதல் ஜுன் 14-ந் தேதி வரையிலும் மீனவர்கள் விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிக்க 61 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இத்தடையை மீறி மீன்பிடித் தொழில் செய்வோர் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்பட்டு, வரிவிலக்களிக்கப்பட்ட டீசலும் நிறுத்தம் செய்யப்பட்டும். அத்துடன் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.