பழனி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி வேனை இழுத்து வந்த 75 வயது பக்தர்
பழனி முருகன் கோவிலுக்கு அலகு குத்தி 75 வயது பக்தர் வேனை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களில் பலர் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் பலர் முடி காணிக்கை செலுத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரை சேர்ந்த கருப்பண நாடார் (வயது 75) என்ற பக்தர் உலக நலன் வேண்டி முதுகில் அலகு குத்தி, அதன்மூலம் வேனை பழனி முருகன் கோவிலுக்கு இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடிவு செய்தார். அதன்படி, நேற்று கருப்பண நாடார் பழனி சண்முகநதி பகுதியில் இருந்து கையில் வேலுடன், முதுகில் அலகு குத்தி அதனை வேனுடன் இணைத்து இழுத்து வந்தார். பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி கோவில் வழியாக அடிவாரம் கிரிவீதிக்கு வேனை அவர் இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.