பெருந்துறையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:மேற்கு வங்காள வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு


பெருந்துறையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:மேற்கு வங்காள வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Feb 2023 1:00 AM IST (Updated: 15 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு

ஈரோடு

பெருந்துறையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேற்கு வங்காள வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

வாலிபர்

மேற்கு வங்காள மாநிலம் பர்கானாஸ் பாகனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பப்லு. இவருடைய மகன் ஹாசா என்கிற சாய்புதின் லஸ்கர் (வயது 21). இவர் பெருந்துறை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு கரும்பு ஜூஸ் வாங்கி தருவதாக கூறி அங்குள்ள முள் காட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சாய்புதின் லஸ்கரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

20 ஆண்டு ஜெயில்

பின்னர் அவரை கோர்ட்டு உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று நீதிபதி மாலதி தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாய்புதின் லஸ்கருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி மாலதி, தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.


Next Story