90 ஆண்டுகள் பழமையான அரசமரம் தீ பற்றி எரிந்தது


குடியாத்தத்தில் 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் தீ பற்றி எரிந்தது.

வேலூர்

குடியாத்தம் நடுப்பேட்டை வ.உ.சி. தெருவில் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சுமார் 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் உள்ளது. அதில் இணைந்து வேப்ப மரமும் வளர்ந்து உள்ளது. இந்த அரசமரம் அடியில் நாக தேவதைகளின் சிலைகள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசமரம் அடியில் உள்ள நாக தேவதைகளுக்கு விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பக்தர்கள் ஏற்றி வைத்த விளக்கு எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பழமையான அரச மரத்தில் பற்றி உள்ளது. அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் அரசமரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்ததை பார்த்து உடனடியாக கோவில் நிர்வாகி சங்கருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தெரிவித்தனர். அதன்பேரில் கோவில் நிர்வாகி மற்றும் கோவில் குருக்கள் ஆகியோர் கோவிலை திறந்தனர்.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அரச மரத்தின் ஒரு பகுதி எரிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் இந்த அரசமரம் அதிகாலை நேரத்தில் பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story