நகை, பணத்தை மோசடி செய்ததாக மூதாட்டி புகார்
நகை, பணத்தை மோசடி செய்ததாக மூதாட்டி புகார்
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தாராபுரம் தாலுகா மூலனூர் அருகே என்.சி.ஜி.வலசு தில்லைக்கவுண்டன்புதூரை சேர்ந்த காளியாத்தாள் (வயது 60) என்பவர் அளித்த மனுவில், 'எனக்கு திருமணம் முடிந்து 35 வருடங்களுக்கு முன்பு விவகாரத்து பெற்று எனது பெற்றோருடன் இருந்தேன். அவர்கள் இறப்புக்கு பிறகு தனியாக உள்ளேன். எனது ஜீவனாம்சம் ரூ.1 லட்சம், கணவர் கொடுத்த 7 பவுன் நகை, பெற்றோர் கொடுத்த 6 பவுன் நகை, நான் வேலை செய்து சம்பாதித்த ரூ.2 லட்சம் ஆகியவற்றை எனது உறவினரிடம் கொடுத்தேன். அவர்கள் என்னை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பதாக ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை உண்டாக்கி நகை, பணத்தை பெற்றுக்கொண்டனர். தற்போது எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், என்னை வீட்டைவிட்டு விரட்டி விட்டனர். இதுகுறித்து தாராபுரம் ஆர்.டி.ஓ. மற்றும் மூலனூர் போலீசில் புகார் அளித்தேன். தற்போது உறவினர்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனது நகை, பணத்தை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.